எம்.ஜி.ஆர்செய்திகள்தமிழ் செய்திகள்பொக்கிஷம்

பேரறிஞர் அண்ணா அவர்களின் 109 வது பிறந்தநாள்..சில நினைவுகள்…!!

பேரறிஞர் அண்ணா அவர்களின் 109 வது(15-9-2018) பிறந்தநாள்..சில நினைவுகள்…!!

காஞ்சீவரம் நடராசன் அண்ணாதுரை (C. N. Annadurai).

1909 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பதினைந்தாம் தேதி நடராசன், பங்காரு அம்மாள் தம்பதிகளுக்கு மகனாக அண்ணா பிறந்தார். சிற்றன்னையான இராஜாமணி அம்மாளின் தயவிலே வளர்ந்தார். கல்லூரிக்கல்வி வரை காஞ்சியிலேயே பயின்றார். தனது பட்டப்படிப்பைச் சென்னை, பச்சையப்பன் கல்லூரியிலே நிறைவு செய்தார்.

அறிஞர் அண்ணா என்று அனைவராலும் அன்போடும், மதிப்போடும் அழைக்கப்படும் முன்னாள் தமிழக முதல்வர், பேரறிஞர் அண்ணா அவர்கள் உலகத் தமிழர்கள் அனைவரதும் உள்ளங்களில் வீற்றிருக்கும் ஒப்பற்ற தலைவர். அப்பழுக்கற்ற அரசியல்வாதி. தமிழிலும் ஆங்கிலத்திலும் தன்னிகரற்று விளங்கிய மேதை. இணையற்ற பேச்சாளர். சுவைமிக்க எழுத்தாளர். எதிர்தரப்பில் இருந்தவர்களாலும் ஏற்றுப் புகழப்பட்ட அறிஞர். மாற்றாரையும் மதித்து நடந்த பண்பாளர். தமிழ் மக்களின் மேம்பாட்டுக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்டவர்.

.பாமர மக்களின் மனங்களில் பகுத்தறிவுக் கருத்துக்களைப் பக்குவமாகப் பதியவைப்பதற்கு உகந்த சாதனம் நாடகமே என்பதில் அண்ணா உறுதியான நம்பிக்கை கொண்டார். அதனால் ஏராளமான நாடகங்களை எழுதினார். சந்திரோதயம், சிவாஜிகண்ட இந்து சாம்ராஜ்யம் முதலிய வரலாற்று நாடகங்களும், வேலைக்காரி, ஓர் இரவு, நீதிதேவன் மயக்கம், காதல்ஜோதி ஆகிய சமூகநாடகங்களும் அவற்றுள் அடங்கும்.ஓர் இரவு, வேலைக்காரி, சொர்க்க வாசல், நல்லதம்பி, நல்லவன் வாழ்வான் என்பன அண்ணாவின் எழுத்திலே
உருவான திரைப்படங்கள். ரங்கோன் ராதா முதலிய நாவல்களையும், எத்தனையோ சிறுகதைகளையும் கூட அண்ணா எழுதியுள்ளார். மக்களிடம் பகுத்தறிவுக் கருத்துக்களை எடுத்துச் செல்வதற்கும், அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தவதற்கும் நாடகங்களையும், திரைப்படங்களையும், இலக்கியங்களையும் முதன் முதலில் முறையாகப் பயன்படுத்தி, அதில் மாபெரும் வெற்றிகண்டவர் அறிஞர் அண்ணா அவர்களே.

அண்ணா தமிழக முதல்வரானதும் சென்னையில் 1968-ம் ஆண்டு தொடக்கத்தில் இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றது. அப்போது, சென்னையில் மையப் பகுதியான அண்ணா சாலையில் (அப்போது மவுண்ட் ரோடு) ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் அலுவலகம் எதிரே கையை உயர்த்தியபடி கம்பீரமாக நிற்கும் அண்ணாவின் சிலையை தனது சொந்த செலவில் எம்.ஜி.ஆர். நிறுவினார். சர்.ஏ.ராமசாமி முதலியார் சிலையை திறந்து வைத்தார்.

உலகத் தமிழ் மாநாட்டில் கருத்தரங்கு ஒன்றில் எம்.ஜி.ஆர். பேசினார். கவிதையைப் பற்றிய நயமான விளக்கம் அளித்தார். ‘அழகும் உள்ளத்து உணர்ச்சியும் சேர்ந்ததுதான் கவிதை ’ என்று கூறினார். கூடியிருந்த மக்கள் கரகோஷம் எழுப்பினர்.

பின்னர், அண்ணா பேச வந்தார். எம்.ஜி.ஆருக்கே குருவாயிற்றே? கேட்க வேண்டுமா? கவிதை பற்றி அவர் கூறும்போது,

‘அறிந்ததனை அறிந்தோர்க்கு

அறிவிக்கும் போதினிலே

அறிந்ததுதான் என்றாலும்

எத்துணை அழகம்மா? என்று

அறிந்தோரையும் வியக்க வைக்கும்

அருங்கலையே கவிதையாகும்’

… என்று கவிதையாலேயே கவிதைக்கு விளக்கம் அளித்தார் அறிஞர் அண்ணா. மக்களின் கரகோஷம் அடங்க வெகுநேர மாயிற்று.

தொடர்ந்து அண்ணா பேசும்போது, ‘அழகும் உள்ளத்து உணர்ச்சியும் சேர்ந்ததுதான் கவிதை என்று எம்.ஜி.ஆர். கூறினார். நீங்கள் கைதட்டினீர்கள். எதற்கு என்று யோசித்தேன். பிறகுதான் தெரிந்தது. அவர் தன்னைப் பற்றியே சொல்லியிருக்கிறார். ஆம். அழகும் உணர்ச்சியும் சேர்ந்த எம்.ஜி.ஆரே ஒரு கவிதைதானே…’ என்றார் அண்ணா.

மக்களின் ஆரவாரம் விண்ணைப் பிளந்தது. இதயக்கனியின் ஈர்ப்பு ரகசியம் அறிந்தவர் அண்ணா!

 

Tags
Show More

5 Comments

  1. When someone writes an piece of writing he/she maintains the
    image of a user in his/her mind that how a user can know it.
    Therefore that’s why this article is outstdanding.
    Thanks!

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close