கோவாவில் 50-வது சர்வதேச திரைப்பட விழா தொடக்கம்..!!

கோவாவில் 50-வது சர்வதேச திரைப்பட விழா தொடக்கம்..!!

கோவாவில் 50-வது சர்வதேச திரைப்பட விழா தொடக்கம்..!!

கோவாவில் 50-வது சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது.பிரகாஷ் ஜவடேகர், அமிதாப் பச்சன், ரஜினி உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.கோவாவில் ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழா நடைபெறும். மத்திய அரசு நடத்தும் இந்த விழாவில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சிறந்த படங்கள் திரையிடப்படும். இதில், இந்தியாவில் உருவாகும் படங்களும் திரையிடப்படும்.கோவா சர்வதேச திரைப்பட விழாவுக்கு, இது 50-வது வருடம். எனவே, இந்த வருடம் மிகப் பிரம்மாண்டமாக இந்த விழா கொண்டாடப்படுகிறது. 20-11-2019 முதல் வருகிற 28-11-2019 ம் வரை 9 நாட்களுக்கு இந்த விழா நடைபெறும்.20-11-2019-அன்று நடைபெற்ற தொடக்க விழாவில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், நடிகர்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த் ஆகியோர் கலந்துகொண்டு, குத்து விளக்கேற்றினர். பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர் தொகுத்து வழங்கிய
இந்த நிகழ்வில், சங்கர் மகாதேவனின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த விழாவில், ‘தாதா சாகேப் பால்கே’ விருது பெட்ரா அமிதாப்பை சிறப்பிக்கும் வகையில், அவர் நடித்த 6 படங்கள் திரையிடப்படுகின்றன. ‘இந்த நிலையில் 50-வது ஆண்டு சர்வதேச திரைப்பட விழாவின் மத்திய அரசின் சிறப்பு கவுரவ விருதான “ஐகான் ஆப் கோல்டன் ஜூப்ளி” எனும் விருது ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டது. மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மற்றும் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ஆகியோர் இணைந்து ரஜினிகாந்துக்கு விருது வழங்கினர்.


விருது வாங்கியபின் ரஜினிகாந்த் பேசியதாவது: “ஐகான் ஆப் கோல்டன் ஜூப்ளி” விருது பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு விருது வழங்கி கவுரவித்த இந்திய அரசுக்கு நன்றி. தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், ரசிகர்கள் மற்றும் என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு இந்த விருதை சமர்ப்பிக்கிறேன்” என கூறினார்.
இந்த வருடம், 76 நாடுகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட படங்களும், இந்திய மொழிகளைச் சேர்ந்த 41 படங்களும் திரையிடப்படுகின்றன. இதில், பார்த்திபன் இயக்கி, நடித்த ‘ஒத்த செருப்பு’ மற்றும் லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய ‘ஹவுஸ் ஓனர்’ ஆகிய 2 தமிழ்ப் படங்கள் திரையிடப்படுகின்றன.
மேலும், பொன்விழா ஆண்டை முன்னிட்டு சிறந்த 12 படங்களின் வரிசையில் கே.பாலசந்தர் இயக்கிய ‘இரு கோடுகள்’ படம் திரையிடப்படுகிறது.
இசையமைப்பாளர் இளையராஜா, இயக்குநர்கள் மிஷ்கின், வெற்றிமாறன், ராம், விக்னேஷ் சிவன், நடிகைகள் நித்யா மேனன், தமன்னா, டாப்சி உள்ளிட்டோர் திரை தொழில்நுட்பம் சார்ந்து பங்கேற்கும் கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. சமீபத்தில் மறைந்த திரை பிரபலங்களான கிரேசி மோகன், கன்னட நாடக ஆசிரியரும், நடிகருமான கிரீஷ் கர்னாட் உள்ளிட்டோருக்கு அஞ்சலியும் செலுத்தப்பட உள்ளது.

 

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS