நடிகர் விஜயகுமாரின் கலைப் பயணம்-8.மஞ்சுளா பெயரில்  சைவ உணவகம் நடத்திய விஜயகுமார்..!!

நடிகர் விஜயகுமாரின் கலைப் பயணம்-8.மஞ்சுளா பெயரில் சைவ உணவகம் நடத்திய விஜயகுமார்..!!

 நடிகர் விஜயகுமாரின் கலைப் பயணம்-8.

மஞ்சுளா பெயரில் சைவ உணவகம் நடத்திய விஜயகுமார்..!!

தொடர்ந்து 3 ஆண்டுகள் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த விஜயகுமார், “அக்னி நட்சத்திரம்” படத்தில் நடித்து பெரும் புகழ் பெற்றார். இதன் மூலம் திரை உலகில் தனது 2-வது ரவுண்டை வெற்றிகரமாகத் தொடங்கினார், விஜயகுமார்.

“கதாநாயகனாக நடித்த நீங்கள் வில்லனாக நடிக்கத்தான் வேண்டுமா?” என்று மதுரை ரசிகர்கள் கேட்டதால், படங்களில் நடிப்பதை நிறுத்தினார், விஜயகுமார். ஆனால், ஒரு திறமையான நடிகர் திரையுலகில் இருந்து ஒதுங்கி இருப்பதை தவிர்க்கும் விதத்தில் மீண்டும் அவரை `அக்னி நட்சத்திரம்’ படத்தில் நடிக்க அழைப்பு விடுத்தார், மணிரத்னம்.

ஒரு அப்பாவின் இரண்டு மனைவிகளுக்கு பிறந்த 2 மகன்களும் ஒருவரை மற்றவர் சந்திக்கும் போதெல்லாம் அக்னி நட்சத்திரமாக உரசிக் கொள்வார்கள். இந்த 2 மகன்களின் உணர்வுகளையும் அன்பால் கட்டுப்படுத்தும் அப்பா கேரக்டரில் விஜயகுமார் பிரமாதப்படுத்தியிருந்தார். படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது.

இந்த படத்தில் நடிக்க நேர்ந்த அனுபவம் குறித்து விஜயகுமார் கூறியதாவது:-

சினிமாவில் நடிப்பதில்லை என்று முடிவெடுத்ததும் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மஞ்சுளா பெயரில் ஒரு சைவ உணவகம் தொடங்கி நடத்தினோம். மூன்று வருடங்களுக்குள் மிகச்சிறந்த உணவகமாக அது வளர்ந்து வந்த நேரத்தில் சென்னைக்கு ஒரு வேலையாக வரவேண்டியிருந்தது. இங்கே வந்தபோதுதான் மீண்டும் படத்தில் நடிக்கும் அழைப்பு தேடி வந்து விட்டது.

“பட அதிபர், ஜீ.வி. என் நண்பர். அவர் தனது தம்பி மணிரத்னம் இயக்கத்தில் `நாயகன்’ படத்தை எடுத்தபோதே அந்தப் படம் விஷயமாக பேசிக் கொண்டிருப்போம். நாயகன் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதோடு, படத்தின் ஒட்டுமொத்த டீமும் புகழ் பெற்றது.

இதே யூனிட் அடுத்த `அக்னி நட்சத்திரம்’ படத்தை ஆரம்பிக்கும்போது, ஒட்டுமொத்த கதையையும் தூக்கி நிறுத்தும் அந்த `அப்பா’ கேரக்டரில் யாரைப் போடலாம் என்று யோசித்திருக்கிறார்கள். டைரக்டர் கே.சுபாஷ் அப்போது மணிரத்னத்திடம் அசோசியேட் இயக்குனராக இருந்தார். அவர் ஒருநாள் என்னை இந்தப் பட விஷயமாக சந்தித்து பேசினார்.

“படத்தின் முதுகெலும்பாக விளங்கக் கூடிய அந்த அப்பா கேரக்டரில் நடிகர் திலகம் சிவாஜி சாரை போடலாமா என்று யோசித்தோம். சிவாஜி சார் நடிக்கும்போது அவருக்கே உரிய அற்புத நடிப்பாற்றல் வெளிப்பட்டு படத்தையும் தாண்டி அவர்தான் நிற்பார். இந்தப் படத்தை பொறுத்தவரையில், படம் பேசப்படும். அதே நேரத்தில் அந்த அப்பா கேரக்டரும் பேசப்பட வேண்டும். `அப்படி ஒரு அப்பா’வுக்கு யோசித்ததில் எங்களுக்கு சட்டென நினைவுக்கு வந்தவர் நீங்கள்தான். எனவே மறுக்காமல் நீங்கள் அந்த கேரக்டரில் நடிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

நான் அவரிடம், “நான் நடிப்பில் இருந்து விடுபட்டு 3 வருஷம் ஆகி விட்டது. உங்கள் விருப்பத்தை நிறைவேற்ற முடியாத நிலையில் இருக்கிறேன்” என்று சொன்னேன்.
அவரோ விடவில்லை. “சார்! எங்களுக்காக இந்த ஒரு படத்தில் மட்டுமாவது நடியுங்கள். இந்த கேரக்டருக்கு உங்களைத் தவிர வேறு யாரையும் எங்களால் யோசிக்க முடியவில்லை” என்றார், விடாப்பிடியாக.
சினிமாவில் வழக்கமாக இரண்டு பெண்டாட்டிக்காரர் கதை என்றால், இரண்டு பெண்டாட்டிகளுக்கு இடையே மாட்டிக் கொள்ளும் கணவர் கேரக்டரை நகைச்சுவையாகவே சித்தரிப்பார்கள். மனைவியர் என்ன சொன்னாலும் அதற்கு `ஆமாம்… ஆமாம்’ சொல்கிற கணவராக இவர்கள் ரசிகர்களை சிரிக்க வைப்பார்கள்.
ஆனால் மணிரத்னம் என்னிடம் அந்த அப்பா கேரக்டரை விவரித்தபோது நிஜமாகவே பிரமிப்பு ஏற்பட்டது. `இந்த கேரக்டரையா விட இருந்தோம்?’ என்கிற சிந்தனையை இந்த கேரக்டர் எனக்குள் ஏற்படுத்தி விட்டது.

படம் ரிலீசான போது, என்னைப் பாராட்டாதவர்கள் இல்லை. குறிப்பாக அந்த அப்பா கேரக்டரில் நடிக்கவில்லை; `வாழ்ந்த மாதிரி’ இருக்கிறது என்று பாராட்டியவர்கள் அதிகம். இந்த படத்துக்குப் பிறகு நான் மீண்டும் படங்களில் பிஸியாகி விட்டேன்.”
இவ்வாறு விஜயகுமார் கூறினார்.

டைரக்டர் அவினாசிமணி இயக்கத்தில் `ஜானகி சபதம்’ என்ற படத்தில் நடிகை கே.ஆர்.விஜயா ஜோடியாக விஜயகுமார் நடித்தார்.

அந்தப் படத்தில் அவினாசி

மணியின் உதவி யாளராக ஓடியாடி வேலைபார்த்த இளைஞரை விஜயகுமாருக்கு ரொம்பவே பிடித்துப் போயிற்று. சினிமாவில் இப்படி அக்கறையாய் தொழில் செய்யும் இளைஞர்கள்தான் பின்னாளில் தங்கள் திறமை நிரூபிக்க வாய்ப்பு கிடைக்கும் நேரத்தில் சிகரம் தொடுவார்கள்.

விஜயகுமார் இப்படி வியந்து பார்த்த அந்த உதவி இயக்குனர் வேறு யாருமல்ல; பாரதிராஜாதான்!

பாரதிராஜாவுடன் அந்தப் படத்தில் விஜயகுமாருக்கு வித்தியாசமான ஒரு அனுபவம் கிடைத்தது. அதுபற்றி விஜயகுமார் கூறுகிறார்:

“ஜானகி சபதம்” படத்தில் எனக்கும், நிர்மலாவுக்கும் ஒரு பாடல் காட்சி. இந்த பாடல் காட்சியை படமாக்கும் பொறுப்பை டைரக்டர் அவினாசிமணி, பாரதிராஜாவிடம் ஒப்படைத்திருந்தார். பாடல் காட்சி படமாக்கப்படுவதற்கு முன்பு, பாரதிராஜா என்னிடம் “இந்தப் பாடலை இந்த மாதிரியான சூழ்நிலையில் எடுத்தால் பிரமாதமாக இருக்கும்” என்றார்.
எதிர்காலத்தில் அவர் பெரிய இயக்குனராக வருவார் என்பதை அப்போதே தெரிந்து கொண்டேன்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS