
அசுரகுரு-சினிமா விமர்சனம் ..!!
அசுரகுரு-சினிமா விமர்சனம் ..!!
விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘அசுரகுரு’. இப்படத்தை அறிமுக இயக்குநர் ராஜ்தீப் இயக்கி உள்ளார். இவர் இயக்குனர் மோகன் ராஜாவிடம் உதவியாளராக பணிபுரிந்தவர். விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக மகிமா நம்பியார் நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, ஜெகன், மனோபாலா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
அதிரடியான திகில் படமாக உருவாகி இருக்கும் இப்படத்தை ஜே.எஸ்.பி. பிலிம் ஸ்டுடியோஸ் சார்பில் ஜே.சதீஷ்குமார் தயாரித்துள்ளார். ராமலிங்கம் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு கணேஷ் ராகவேந்திரா இசையமைத்துள்ளார்.
கொரியர் வேலை பார்க்கும் விக்ரம் பிரபுவும், காவல்துறையில் கிரைம் பிரிவில் வேலை பார்க்கும் ஜெகனும் நெருங்கிய நண்பர்கள். விக்ரம் பிரபுக்கு அடிக்கடி தலைவலி ஏற்படுகிறது. தலைவலி வரும் போதேல்லாம் வெளியில் சென்று பெரிய தொகையை திருடிவிட்டு வருகிறார்.
அப்படி ஒருநாள் ஹவாலா பணத்தை திருடுகிறார். இந்த விஷயம் போலீசுக்கு போகாமல் டிடெக்டிங் ஏஜென்சியில் பணி புரியும் மகிமா நம்பியாரிடம் செல்கிறது. அவரும் தீவிர விசாரணையில் இறங்குகிறார். வங்கியில் திருடிய பணத்திற்காக விக்ரம் பிரபுவை போலீஸ் ஒரு பக்கம் தேடுகிறது.
ஒரு கட்டத்தில் மகிமா, ஹவாலா பணத்தை கொள்ளையடித்தது விக்ரம் பிரபு என்று தெரிந்துக் கொள்கிறார். இறுதியில் விக்ரம் பிரபுவை போலீசில் மகிமா சிக்க வைத்தாரா? கொள்ளையடித்த பணத்தை விக்ரம் பிரபு என்ன செய்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் விக்ரம் பிரபு, தனக்கே உரிய பாணியில் நடித்திருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் மெனகெட்டிருக்கிறார். நாயகியாக வரும் மகிமா, துணிச்சலான கதாபாத்திரத்தை அழகாக கையாண்டிருக்கிறார். நண்பராக வரும் ஜெகன், இரண்டு மூன்று காட்சிகளில் மட்டும் வரும் யோகி பாபு, இருவரும் கொடுத்த வேலை செய்திருக்கிறார்கள். போலீஸ் அதிகாரியாக வரும் சுப்பராஜ் நடிப்பில் பளிச்சிடுகிறார்.
நாயகன்கள் கொள்ளையடித்து பணம் சேர்க்கும் படங்களின் வரிசையில் இப்படமும் அமைந்திருக்கிறது. கொஞ்சம் மாறுபட்ட கோணத்தில் சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர் ராஜ்தீப். கடைசியில் போலீஸ் அதிகாரியை சிக்க வைக்கும் காட்சி நல்ல டிவிஸ்ட் .கணேஷ் ராகவேந்திரா இசையில் பாடல்களையும், பின்னணி இசையும் நன்கு ரசிக்க முடிகிறது. ராமலிங்கத்தின் ஒளிப்பதிவு சிறப்பு.
மொத்தத்தில் ‘அசுரகுரு’ அசத்தல் குரு.
CATEGORIES விமர்சனம்
TAGS Asuraguru-tamil movie-review-director raajdepjaganmagima nambiyarmanibalavikram prabuyogibabuஅசுரகுரு-சினிமா விமர்சனம் ..!!