பாரம்-சினிமா விமர்சனம்..!!’

பாரம்-சினிமா விமர்சனம்..!!’

பாரம்-சினிமா விமர்சனம்..!!’

ஆடுகளம்’, ‘காக்கா முட்டை’, ‘விசாரணை’, ‘வடசென்னை’ என்று தொடர் வெற்றிகளைக் கொடுத்ததுடன், தற்போது தனுஷ் நடிப்பில் வெளிவந்து அசுர வெற்றியுடன் ஓடிக்கொண்டிருக்கும் ‘அசுரன்’ படத்தைக் கொடுத்த இயக்குநர் வெற்றி மாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி, இந்த ஆண்டுக்கான தேசிய விருதை வென்ற ஒரே தமிழ்ப்படம் என்ற பெருமையைப் பெற்ற பிரியா கிருஷ்ணசாமியின் ‘பாரம்’ படத்தை வெளியிட்டிருக்கிறது.

ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் காவல்காரராக இருந்து வருபவர், கருப்பசாமி. அறுபது வயதை தாண்டிய அவர், ஒரு விபத்தில் சிக்குகிறார். அதில், அவருடைய இடுப்பு எலும்பு முறிந்து போகிறது. பக்கத்து டவுனில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகிறார்கள். அவரை பரிசோதித்த டாக்டர், “இடுப்பில் ஆபரேஷன் செய்து சிகிச்சை அளித்தால் குணமாகி விடும்” என்கிறார்.

அதற்கு செலவாகும் என்பதால் அவருடைய மகன் செந்தில் ஆபரேஷனுக்கு சம்மதிக்க மறுக்கிறார். வலியால் துடிக்கும் அப்பாவுக்கு எந்த சிகிச்சையும் அளிக்காமல், அலட்சியப்படுத்துகிறார். இந்த நிலையில், பெரியவர் கருப்பசாமி திடீரென்று மரணம் அடைகிறார். அவருடைய மரணத்தில் மர்மம் இருப்பதாக கருப்பசாமியின் மருமகன்கள் (சகோதரியின் மகன்கள்) சந்தேகிக்கிறார்கள்.

மருமகன்களில் ஒருவரான வீரா போலீசுக்கு தகவல் தெரிவிக்கிறார். பத்திரிகைகளுக்கும் தகவல் கொடுக்கிறார். அமைச்சர் கேட்டுக்கொண்டதால், கருப்பசாமியின் மரணத்தில் சந்தேகம் இல்லை என்று வழக்கை முடித்து விடுகிறார்கள்.

பத்திரிகை நிருபர்கள் துப்பறிந்து, கருப்பசாமிக்கு அவருடைய மகன் சம்மதத்தின் பேரில், விஷ ஊசி போட்டு கொலை செய்யப்பட்டதை கண்டுபிடிக்கிறார்கள். இந்த விவகாரம் நாடு முழுவதும் காட்டுத்தீயாக பரவுகிறது. இதையடுத்து குற்றவாளிகள் கைது செய்யப்பட்டார்களா? அவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கப்படுகிறது? என்பதே படத்தின் மீதிக்கதை.

கருப்பசாமியாக ஆர்.ராஜு நடித்து இருக்கிறார். விபத்துக்குள்ளாகி காயம் அடைந்த ஒரு முதியவரின் வலியையும், வேதனைகளையும் படுத்துக்கொண்டே வெளிப்படுத்துகிறார். இயற்கை உபாதைக்காக, மகனை அழைக்கும்போது, ஒட்டு மொத்த பார்வையாளர்களின் அனுதாபத்தை சம்பாதிக்கிறார்.  

அவரைப்போலவே ஒப்பனை எதுவும் செய்து கொள்ளாமல் கருப்பசாமியின் மகன் முத்துக்குமார், மருமகன்கள் சுகுமார் சண்முகம், சமராஜா, பிரேம்நாத், சகோதரியாக ஜெயலட்சுமி ஆகியோர் கிராமத்து மனிதர்களாக வாழ்ந்து இருக்கிறார்கள்.

(( படத்தில் நடித்திருக்கும் 85க்கும் மேற்பட்டவர்களில் பலரும் இப்போதுதான் முதல்முறையாக கேமரா முன் நிற்பவர்கள். படமும் காட்சியமைப்புகளும் இயல்புக்கு மிக நெருக்கமாக இருக்க வேண்டும் என்பதற்காக படப்பிடிப்பு நடந்த கிராமத்திலிருந்தே தேர்வு செய்யப்பட்டவர்கள்தான் இவர்கள்))

இசை மற்றும் ஒலி வடிவமைப்பை வேத் நாயர் மேற்கொள்ள, ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவு இயக்குநராகப் பணியாற்றியிருக்கிறார். தருண் சர்மா ஒலி வடிவம் மற்றும் மிக்ஸிங் பொறுப்புகளை கவனித்திருக்கிறார். அடிஷனல் ஸ்க்ரீன் பிளே மற்றும் வசனங்களை எழுதியிருப்பவர் ராகவ் மிர்டாத். டைரக்டர் பிரியா கிருஷ்ணசுவாமி, கிராமப்புறங்களில் தலைக்கூத்தல் என்ற பெயரில் சொந்தப் பிள்ளைகளாலேயே கொல்லப்படும் பலவீனமான முதியவர்களைப்பற்றி இந்த படத்தில் விவரமாக கூறியுள்ளார். இயல்பான நடிப்பு, யதார்த்தமான காட்சிகள் மூலம் ஒரு கிராமத்தில், எளிய மனிதர்களுடன் வாழ்ந்த உணர்வை ஏற்படுத்தி விடுகிறார்.
மொத்தத்தில் ‘பாரம்’… அவசியம் பார்க்கவேண்டிய படம்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS