இளையராஜாவுக்காக போராடிய பாரதிராஜா!!!

இளையராஜாவுக்காக போராடிய பாரதிராஜா!!!

இளையராஜாவுக்காக போராடிய பாரதிராஜா!

தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளராக இருப்பவர் இளையராஜா. இவர் 40 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் அமைந்திருக்கும் ஒரு கட்டடத்தை பயன்படுத்தி வந்தார். இந்த இடத்தில்தான் பாடல் பதிவு, இயக்குநர்கள்
சந்திப்பு என அனைத்து பணிகளையும் இளையராஜா செய்து வந்தார்.ஆனால், சில மாதங்களுக்கு முன்பு பிரசாத் ஸ்டூடியோவின் தற்போது இயக்குனராக இருக்கும் சாய் பிரசாத்துக்கும், இளையராஜாவிற்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

பிரசாத் ஸ்டூடியோவிலிருந்து இளையராஜாவை காலிசெய்யச் சொன்னார்கள் .இளையராஜா மறுக்கவே அவர்கள் இளையராஜா பயன்படுத்தி வந்த இசைக்கூட த்தை மூடினார்கள்.. இதன் காரணமாக இளையராஜா பிரசாத் ஸ்டூடியோவிற்கு செல்லாமல் இருந்தார். இளையராஜாவின் பணிகளும் முடங்கின.விவகாரம் , காவல் நிலையம், நீதிமன்றம் வரை சென்று விவகாரம் பெரிதானது.

இந்நிலையில், இளையராஜாவுக்கு ஆதரவாக இயக்குநர் பாரதிராஜா, இயக்குநர் பாக்யராஜ், ஃபெஃப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, இசைக் கலைஞர் சங்கத் தலைவர் தினா, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர் எழில், ரமேஷ் கண்ணா ,வேலுப்பிரபாகரன், பெப்சி சிவா, அசோக் மேத்தா, தோழர் சுபாஷ், ரமேஷ் பிரபாகரன் உட்பட பலர்…ஆகியோர் 28-11-2019 அன்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவை முற்றுகையிட்டனர்.

பாரதிராஜா, பாக்யராஜ், சீமான் இவர்கள் அனைவரும் பிரசாத் ஸ்டூடியோவுக்குள் செல்ல முயன்றனர். ஆனால், அங்கிருந்த பவுன்சர்கள் இவர்களைத் தடுக்க, இவர்களது ஆதரவாளர்களுக்கும் பவுன்சர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சலசலப்பானது. பிறகு, அவர்கள் பிரசாத் ஸ்டூடியோவுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

அரை மணி நேர பேச்சுவார்த்தைக்குப் பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்தார் இயக்குநர் பாரதிராஜா.அப்போது, “45 வருடங்களுக்கு மேல ஒரு கலைஞன் பிரசாத் ஸ்டூடியோவுல உட்கார்ந்து தன்னுடைய வேலைகளைச் செய்திருக்கிறான். அது, பிரசாத் ஸ்டூயோவுக்கும் மரியாதை. இவனுக்கும் மரியாதை. பத்து வருஷம் ஒரு இடத்துல இருந்தாலே சென்டிமென்ட் ஆகிடும். ஆனால், இளையராஜா இங்கே 45 வருடங்களா வாழ்ந்திருக்கான். வருமானத்தை ஈட்டிக் கொடுத்திருக்கிறான். பிரசாத் ஸ்டூடியோவும் பெரிய ஸ்தாபனம். எல்.வி.பிரசாத், ரமேஷ் பிரசாத்னு எல்லோரும் நல்ல மனிதர்கள். ஆனால், காலச்சூழல் காரணமாக இளையராஜாவை காலி செய்யச் சொல்லியிருக்கிறார்கள். இத்தனை வருடங்களாக அவன் வாழ்ந்த இடத்தைவிட்டு போகச் சொன்னதும் அவன் மனது வேதனையடைந்தது.

அதனால் அந்தக் கலைஞனுக்கு ஆதரவாக தமிழ்த் திரையுலகம் சார்பாக நாங்கள் பிரசாத் ஸ்டூயோ நிர்வாகத்திடம் பேசினோம். ‘எல்லாமே திடீர்னு ஒரு முடிவுக்கு வந்தா கலைஞன் திணறிப் போயிடுவான். கொஞ்சம் கால அவகாசம் கொடுங்க. அதுல என்ன செய்யலாம்னு முடிவெடுப்போம். அதுவரை அவனை இங்கே வேலை செய்ய அனுமதி கொடுங்க’ன்னு ஒரு அறிக்கையை கொடுத்திருக்கோம். இந்தியாவுடைய எல்லா மாநிலங்களும் மதித்த இசைக் கலைஞன் இளையராஜா. அவங்களும் அடுத்த அழைப்புக்குத் தயாராக இருக்கிறார்கள்.

பிரசாத் ஸ்டூடியோவின் நிர்வாக இயக்குநர் இல்லை. அதனால் அங்குள்ள அதிகாரிகளிடம் பேசிவிட்டு வந்திருக்கிறோம். இன்னும் சில நாள்களில் அதன் நிர்வாக இயக்குநரை சந்தித்துப் பேச இருக்கிறோம். இளையராஜாவுக்கும் பிரசாத் ஸ்டூடியோவுக்கும் எந்தப் பாதகமும் இல்லாமல் நல்ல முடிவை எடுப்போம்” என்றார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS