செய்திகள்தமிழ் செய்திகள்பொக்கிஷம்

மனித நேயர் இயக்குநர் சி.வி.ராஜேந்திரன்…!

மனித நேயர் இயக்குநர் சி.வி.ராஜேந்திரன்…!

பழகுவதற்கு மிகவும் இனிமையானவர் …அதிர்ந்து பேசத்தெரியாதவர் ….இன்று நம்மை (1-4-2018-காலை சுமார் 8 மணிக்கு) விட்டுப் பிரிந்து விட்டார்.அடுத்தவர்களுக்கு உதவும் தன்மை கொண்ட மனித நேயர்.

மதுராந்தகம் அருகே உள்ள சித்தாமூர்தான் இவரது சொந்த ஊர். இயக்குநர் ஸ்ரீதரின் மிக நெருங்கிய உறவினராவார். 1960-ம் ஆண்டு ஸ்ரீதர் மீண்ட சொர்க்கம்’ படத்தை தொடங்கியபோது அவருடன் இணைந்தார். 1967-ல் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தில்  ஸ்ரீதரிடம் இணை இயக்குநராகப் பணியாற்றினார். தொடர்ந்து ஸ்ரீதருடன், ‘கலைக் கோயில்’, ‘வெண்ணிற ஆடை’, ’கொடிமலர்’, ’நெஞ்சிருக்கும் வரை’ ஆகிய படங்களில் இணை இயக்குநராகப் பணி புரிந்தார்.

தயாரிப்பாளர் ஏ.கே.வேலன் மூலம் சித்ராலயா கோபு கதை, வசனத்தில் உருவான அனுபவம் புதுமை’ படத்தின் மூலம் 1967-ல் தமிழ்த் திரையுலகத்தில் இயக்குநரானார் சி.வி.ராஜேந்திரன்.

அந்தச் சமயத்தில், இந்திய-சீனா போர் மூண்டது. அதற்கு நிதி திரட்டும் பொருட்டு நடிகர், நடிகைகள் நாடகத்தில் நடித்தனர். இதற்காக கலாட்டா கல்யாணம்’ என்ற நாடகத்தை எழுதினார் சி.வி.ராஜேந்திரன். 1968-ல் இந்த நாடகம் திரைப்படமாக தயாராகும்போது சிவாஜியின் சிபாரிசில் இவரே இந்தப் படத்தை இயக்கினார்.

இப்படத்தில்தான் முதன்முறையாக ஜெயலலிதா, சிவாஜிக்கு ஜோடியாக நடித்தார். அதை வரவேற்கும் விதமாக கண்ணதாசன் நல்ல இடம்; நீ வந்த இடம்’ என்ற பாடலை எழுதினார்.

தொடர்ந்து இவரது இயக்கத்தில் 1970-ல் வீட்டுக்கு வீடு’, 1971-ல் ‘புதிய வாழ்க்கை’, 1971-ல் ‘சுமதி என் சுந்தரி’, 1972-ல் எழுத்தாளர் கோமல் சுவாமிநாதன் எழுதிய ‘நவாப் நாற்காலி’ ஆகிய படங்கள் வெளியாகின.

1972-ல் பாலிவுட் நடிகரான தேவானந்த் ஹிந்தியில் நடித்த ‘ஜானி மேரா நாம்’ படம் தமிழில் தயாரிப்பாளரும், நடிகருமான கே.பாலாஜின் தயாரிப்பில் ‘ராஜா’வாக உருமாறி வர… அதையும் சி.வி.ராஜேந்திரனே இயக்கினார். இத்திரைப்படம் வசூலில் சாதனை புரிந்த படமாக அமைந்தது.

ஜெய்சங்கர், பாரதி, நாகேஷ், ஜெயந்தி, விஜயலலிதா இவர்களின் நடிப்பில் ஹாலிவுட் ஜேம்ஸ்பாண்ட் பட பாணியில் இவர் இயக்கிய ‘நில் கவனி காதலி’ என்ற படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.

தொடர்ந்து சிவாஜியின் நடிப்பில், ‘நீதி’, ‘பொன்னூஞ்சல்’, ’என் மகன்’, ‘சிவகாமியின் செல்வன்’, ‘வாணி ராணி’ 1982-ல் ‘தியாகி’, 1984-ல் ‘வாழ்க்கை’ என்று பல புகழ் பெற்ற திரைப்படங்களை இயக்கியிருக்கிறார்.

இவர் இயக்கத்தில் வெளியான 14 படங்கள் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்ததாகும். 1982-ல் நடிகர் பிரபு அறிமுகமா சங்கிலி’ படத்தை இயக்கியவரும் இவர்தான்.

1993 ஆண்டிலிருந்து நடிப்பதிலிருந்து விலகியிருந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனை, 4 ஆண்டு இடைவெளிக்குப் பிறது தனது சொந்தப் படமான ஒன்ஸ்மோர்’ படத்தில் நடிக்க வைத்த பெருமையும் இவருக்குண்டு.

1980-ம் ஆண்டு வெளியான கமல் நடித்த ‘உல்லாச பறவைகள்’ படத்தை இயக்கியவரும் இவர்தான். தொடர்ந்து, ரஜினியின் நடிப்பில் ‘கர்ஜனை’ படத்தையும் இயக்கியிருந்தார். 1989-ல் சத்யராஜ் நடிப்பில் வெளியான சின்னப்பதாஸ்’ படம்தான் இவர் இயக்கத்தில் வந்த கடைசிப் படமாகும்

ரஜினி நடித்த ஆறிலிருந்து அறுபது வரை’ படத்தை ஹிந்தியில் பூர்ண சந்திரா’ என்ற பெயரில் இவர் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் சி.வி.ராஜேந்திரன் தொலைக் காட்சிகளில் பல தொடர்களையும் இயக்கியிருக்கின்றார். முதன்முதலாக நா.பார்த்தசாரதியின் ‘குறிஞ்சி மலர்’ தொடரை இயக்கினார். இத்தொடரில் கதாநாயகனாக நடித்தவர் மு.க.ஸ்டாலின்.  இவர் இயக்கிய ‘கோகிலா எங்கே போகிறாள்’ இன்ற தொடருக்கு சிறந்த இயக்குநர் விருது இவருக்குக் கிடைத்தது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது இவருக்கு ‘கலைமாமணி’’ விருது கொடுத்து கௌரவித்தார்.

இவருக்கு ஜானகி என்ற மனைவியும், ஒரு பெண், ஒரு ஆண் என்ற இரு வாரிசுகளும் உள்ளனர்.

இயக்குநர் சி.வி.ராஜேந்திரன் சமீப காலமாக வயோதிகத்தின் காரணமாய் சுகவீனமாய் இருந்தார். இதனால் சிகிச்சைக்காக மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு மருத்துவ சிகிச்சை பலனளிக்காமல் 1-4-2018 அன்று காலை 8 மணிக்கு இவரது உயிர் பிரிந்தது.

இறுதிச் சடங்குகள் இவரது மகன் அமெரிக்காவில் இருந்து திரும்பியதும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

பிரபல எழுத்தாளர் தேவிபாலா தனது முகநூலில் எழுதியது உங்கள் பார்வைக்கு….

இயக்குநர் திரு.சி.வி.ராஜேந்திரன் அவர்களது மறைவு குறித்து ஆழ்ந்த அதிர்ச்சி அடைந்தேன்.மனித நேயமும் பாசமும் இந்த வயதிலும் சினிமா பற்றிய காதலும் உழைக்கும் ஆர்வமும் கொண்ட மகத்தான மனிதர்.சிவாஜி சாரை வைத்து அவர் இயக்கிய படங்கள் ஏராளம் என்பதை தமிழ் திரை உலகம் அறியும்.வெகு சமீபத்தில் அருமை நண்பர் மேஜர்தாசன் என்னை அவரிடம் அழைத்துப்போனார்.ஏற்கனவே அவரிடம் எனக்கு நட்பு உண்டு.ஒரு படம் பண்ணலாம் என என்னை அழைத்து அழகான ஒரு காதல் கதையை சொன்னார்.திரைக்கதை வசனத்தை என்னிடம் ஒப்படைத்தார்.முழு சுதந்திரமும் தந்தார்.சிவாஜி சாரின் பேரனை அறிமுகப்படுத்த போவதாகச்சொன்னார்.நானும் அவரும் இரண்டு முறை இது தொடர்பாக விவாதித்து நான் ஸ்கிரிப்ட் வேலைகளை தொடங்கி விட்டேன்.இந்த நேரத்தில் இப்படி ஒரு அதிர்ச்சி.படங்கள் நாளைக்கே கிடைக்கும்.ஆனால் சி.வி.ஆர் போன்ற அற்புதமான பாசம் நிறைந்த ஒரு நல்ல ஆசான் இனி கிடைக்க போவதில்லை.அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

 

Tags
Show More

3 Comments

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close