பொக்கிஷம்

சினிமா பொக்கிஷத்தில் -ஜெமினி கணேசன்..!!

சினிமா பொக்கிஷத்தில் -ஜெமினி கணேசன்..!தமிழ்த் திரை உலகில் எம்.ஜி.ஆரும் சிவாஜிகணேசனும், புகழின் உச்சியிலிருந்த அதே காலகட்டத்தில் தன் அழகாலும், இயற்கையான நடிப்பாலும் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரங்களாலும் ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டு ‘காதல் மன்னனாக’ கொடிகட்டிப் பறந்தவர் ஜெமினிகணேசன். அவர் நம்மை விட்டு பிரிந்து (22-3-2005)-(22-3-2018-அன்றோடு)  பதிமூன்று வருடங்கள் ஆகின்றன.

ஜெமினிகணேசனின் தந்தை பெயர் ராமசாமி. தாயார் கங்கம்மா. புதுக்கோட்டையில் நல்ல வசதியுடன் வாழ்ந்த குடும்பத்தில், முதல் குழந்தை பிறந்த சில நாள்களிலேயே  இறந்து விட ராமசாமி – கங்கம்மா தம்பதியருக்கு இரண்டாவது குழந்தையாகப்(17 நவம்பர் 1920) பிறந்தவர்தான் ஜெமினி கணேசன். பெற்றோர் சூட்டிய பெயர் கணேஷ்.

புதுக்கோட்டை மகாராஜா கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றிய நாராயணசாமி அய்யர் ஜெமினி கணேசனுக்கு சின்னத் தாத்தா முறையாகும். ஜெமினி கணேசன் தனது பத்து வயது வரை நாராயணசாமி அய்யர் வீட்டில்தான் வளர்ந்தார். மேலும், தேவதாசி முறையை ஒழிக்க காரணமாக இருந்த டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி ஜெமினிக்கு அத்தை முறையாகும்.

ஜெமினி கணேசன் புதுக்கோட்டை நெல்லுமண்டி தெருவில் இருந்த குலமது பாலையா பிரைமரி ஸ்கூலில் பள்ளிப்படிப்பை தொடங்கினார். அதன்பிறகு, தனது ஏழாம் வகுப்பை சென்னையில் உள்ள ராஜாமுத்தையா செட்டியார் பள்ளியிலும் அதன்பிறகு பிற வகுப்பை ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியிலும் படித்தார் ஜெமினிகணேசன்.

ஜெமினிகணேசன் முதன் முறையாகப் பார்த்த தமிழ்ப்படம் டி. வி. சுந்தரம் – டி. பி. ராஜலட்சுமி நடித்த ‘வள்ளிதிருமணம்’. 48 பாடல்கள் கொண்ட அந்தப் படத்தின் எல்லாப் பாடல்களும் அந்தச் சமயத்தில் ஜெமினிக்கு மனப்பாடமாக இருந்ததாம். அந்தப் பாடல்களைப் பாடிப்பாடி ரசிப்பாராம் ஜெமினிகணேசன்.

ஜெமினிகணேசன் சென்னை கிறித்தவக் கல்லூரியில் தனது கல்லூரிப் படிப்பை முடித்தார். சில காலம் வேலையில்லாமல் இருந்த ஜெமினி, தான் படித்த கிறித்துவ கல்லூரியிலேயே ரசாயன விரிவுரையாளராகப் பணியைத் தொடங்கினார்.

பின்னாளில், ஜெமினி ஸ்டூடியோவில் நடிப்பதற்கு சான்ஸ் கேட்டு வருபவர்களை நேரில் அழைத்து, அவர்களின் திறமையை எடை போட்டு நிர்வாகத்துக்குத் தெரிவிக்கும் பணியில் ஈடுபட்டார் ஜெமினிகணேசன். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், அப்படி ஜெமினிகணேசன் அதிகாரியாகப் பணியாற்றியபோது, ஜெமினி ஸ்டூடியோவில் வேலை கேட்டு வந்தவர்களில் சிவாஜி கணேசனும் ஒருவர்.

1947-ம் ஆண்டு, தான் பணிபுரியும் ஜெமினி நிறுவன தயாரிப்பில் ‘மிஸ் மாலினி’ என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார். அதைத் தொடர்ந்து, ஜெமினி பட நிறுவனங்களின் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துவந்த அவருக்கு, 1952-ம் ஆண்டு வெளிவந்த ‘தாய் உள்ளம்’ என்ற திரைப்படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்தவர் ஆர்.எஸ்.மனோகர். பின்னாளில் ஆர்.எஸ்.மனோகர் வில்லனாகவும், ஜெமினி கணேசன் கதாநாயகனாகவும் பல படங்களில் நடித்தனர். ஜெமினி நிறுவனத்தில் வேலை பார்த்ததால் ஏற்பட்ட அடையாளப் பெயர் பின்னாளில் அப்படியே நிலைத்துவிட்டது.

எம்.ஜி.ஆர், சிவாஜி மற்றும் ஜெமினி கணேசனில் முதன்முறையாக இரட்டை வேடத்தில் நடித்தவர் ஜெமினி கணேசன்தான். அந்தப் படத்தின் பெயர் “மனம் போல் மாங்கல்யம்”. ஜெமினிகணேசனும் சாவித்திரியும் இணைந்து நடித்த முதல் படமும் இதுதான். ஜெமினியின் வாழ்வில் சாவித்திரி இடம்பெற வழிவகுத்த படம் “மிஸ்ஸியம்மா.” அதற்கு முன்பு இணைந்து நடித்திருந்தாலும் கூட, மிஸ்ஸியம்மாவில் இருந்துதான் ஜெமினிகணேசனும் சாவித்திரியும் நெருங்கிப் பழக ஆரம்பித்தார்கள்.

1955 ம் ஆண்டு சாவித்திரியைக் கரம் பிடித்தார் ஜெமினிகணேசன். ஆரம்பத்தில், அபிராமபுரத்தில் 400 ரூபாய்க்கு வாடகை வீட்டில் வசித்த ஜெமினி சாவித்திரி ஜோடி, பின்னாளில் தி. நகர் அபிபுல்லா வீதியில் சொந்த வீடு கட்டி குடிபெயர்ந்தனர்.

சாவித்திரி மீது உயிரையே வைத்திருந்தார் ஜெமினிகணேசன். வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தில் வெள்ளையத்தேவனாக நடிக்கும் வாய்ப்பு ஜெமினிகணேசனுக்கு வந்தது. அந்தச் சமயத்தில் சாவித்திரி நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்தார். சாவித்திரியை விட்டு பிரிந்து செல்ல மனமில்லாத ஜெமினி அந்த வாய்ப்பை முதலில் மறுத்துவிட்டார். சிவாஜியும் பி. ஆர். பந்தலுவும் தொடர்ந்து வற்புறுத்தவே சாவித்திரிக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்துவிட்டு படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக ஜெய்ப்பூர்க்குச் சென்று விட்டார். ஜெமினி. தினமும், போன் செய்து சாவித்திரியுடன் தவறாமல் பேசி வந்தார். ஆனால், படப்பிடிப்பு முடிந்து ஜெமினிகணேசன் சென்னை திரும்பிய பிறகுதான் சாவித்திரிக்குக் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையின் பெயர் விஜயசாமுண்டீஸ்வரி.தமிழ் சினிமாவில் ஈடுஇணையற்ற ஜோடியாய் விளங்கிய ஜெமினிகணேசன் – சாவித்திரி பிரிவதற்கு காரணமாய் இருந்த திரைப்படம் “பிராப்தம்”. மூகமனசுலு என்னும் தெலுங்கு திரைப்படத்தின் ரீமேக்தான் இந்தத் திரைப்படம். மூகமனசுலு படத்தை பார்த்த சாவித்திரி அதை தமிழில் ரீமேக் செய்து, தயாரித்து, டைரக்ட் செய்ய ஆசைப்பட்டார். இதை அறிந்த ஜெமினி, “தமிழில் இந்தப் படத்தை சொந்தமாகத் தயாரிக்க வேண்டாம். விஷப்பரீட்சை” என்றார். பின்னர், இருவருக்குள்ளும் ஏற்பட்ட வாக்குவாதத்தின் மூலம் கண்ணீருடன் சாவித்திரியை விட்டு பிரிந்தார் ஜெமினி. பின்னாளில், ஜெமினி கூறியது போல பிராப்தம் படத்தின் மூலம் தனது பெரும்பாலான சொத்துகளை இழந்தார் சாவித்திரி.

ஜெமினி கணேசன் நடிகர் மட்டுமன்றி சிறப்பாக கார் ஓட்டுவதில் வல்லவர். இவர் வேகத்துக்கு யாராலும் கார் ஓட்ட முடியாதாம். இவர் கார் ஓட்டும் வேகத்துக்குப் பயந்து, சில ஸ்டுடியோக்களில் இவருக்காகவே வேகத்தடை வைத்த நிகழ்வுகள் நடந்ததுண்டு.

ஜெமினி கணேசன் தயாரித்து நடித்த ஒரே படம் ‘நான் அவனில்லை’. இதேபோல் ஜெமினிகணேசன், தாமரை மணாளனுடன் இணைந்து ‘இதய மலர்’ என்ற படத்தையும் இயக்கியுள்ளார்.

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் விருப்பத்திற்குரிய நடிகர்களில் ஒருவர் ஜெமினிகணேசன். இவரது இயக்கத்தில் புன்னகை, இரு கோடுகள், தாமரை நெஞ்சம், பூவா தலையா, காவியத்தலைவி, நான் அவனில்லை, உன்னால் முடியும் தம்பி போன்ற பல படங்களில் நடித்தார். இவற்றில் பெரும்பாலான படங்கள் வெற்றிப்படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எம்.ஜி.ஆருடன் ‘முகராசி’ என்ற ஒரே படத்தில் இணைந்து நடித்த ஜெமினி கணேசன், சிவாஜி கணேசனுடன் 13 படங்களில் இணைந்து நடித்துள்ளார் ஜெமினிகணேசன். ஜெய்சங்கருடன் ‘ஒருதாய் மக்கள் ‘ படத்தில் சேர்ந்து நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார் ஜெமினிகணேசன். பின்னர் ஏற்பட்ட கால்ஷீட் பிரச்னையால் ஜெமினிக்கு பதில் முத்துராமன் அந்தப் படத்தில் நடித்தார்.

மேலும், கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக இருந்தபோது அவருடன் நடித்த ஜெமினிகணேசன் பின்னர் அவர் பெரிய நடிகரானதும், `உன்னால் முடியும் தம்பி’, ’அவ்வை சண்முகி’ ஆகிய படங்களில் நடித்திருந்தார். ரஜினியும் கமலும் இணைந்து நடித்த ‘அலாவுதினும் அற்புத விளக்கும்’ படத்திலும் ஜெமினி நடித்திருந்தார். விஜயகாந்துடன் ’பொன்மனச்செல்வன்’, கார்த்திக்குடன் ’மேட்டுக்குடி’, பிரபுதேவாவுடன் “நாம் இருவர் நமக்கு இருவர்”, அர்ஜுனுடன் “கொண்டாட்டம்” ஆகிய படங்களில் இணைந்து நடித்தார் ஜெமினிகணேசன். இதுதவிர “கிருஷ்ண தாசி” என்ற சின்னத்திரை தொடரிலும் நடித்துள்ளார் ஜெமினிகணேசன்.

ஜெமினிகணேசனுடன் அதிக படங்களில் நடித்த கதாநாயகிகள் சாவித்திரி, சரோஜாதேவி, பத்மினி ஆகிய மூன்று பேரும்தான். சாவித்திரி 25 படங்களிலும், சரோஜாதேவி 21 படங்களிலும், பத்மினி 19 படங்களிலும் நடித்திருக்கிறார்கள்.

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை பல நடிகர்கள் காதல் காட்சியில் உருகி உருகி நடித்திருந்தாலும், ‘காதல் மன்னன்’ என்று சொன்னதும் அனைவருக்கும் ஞாபகம் வருவது ஜெமினி கணேசன்தான். திரைப்படங்களில் மட்டுமன்றி சொந்த வாழ்க்கையிலும் காதல் மன்னனாக வாழ்ந்தவர்.

ஜெமினிகணேசன் தமிழில் 172 படங்களும், மலையாளத்தில் 9 படங்களும், இந்தியில் 5 படங்களும்,தெலுங்கில் 4 படங்களும் மற்றும் மர்ம வீரன், நூற்றுக்கு நூறு, அன்னை வேளாங்கண்ணி, சதி சுமதி(தெலுங்கு), ஜீசஸ் (மலையாளம்) ஆகிய படங்களில் கௌரவ வேடங்களிலும் நடித்திருக்கிறார் ஜெமினிகணேசன்.

ஜெமினிகணேசன் நடித்ததில் 30 படங்கள் நூறு நாள்களை தாண்டி ஓடிய வெற்றி படங்கள். “கல்யாணப்பரிசு” வெள்ளி விழா கண்டது. மொத்தத்தில் சுமார் 200 படங்களில் நடித்துள்ளார் ஜெமினிகணேசன்.

இவரது நடிப்புத் திறமைக்கு மரியாதை செய்யும் விதமாக, 1970 ஆம் ஆண்டு “காவியத்தலைவி” திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு மாநிலத் திரைப்பட விருது கிடைத்தது.1966-67ல் கலைமாமணி பட்டம் வழங்கப்பட்டது.

1970 ம் ஆண்டு மத்திய அரசால் ‘பத்மஸ்ரீ’ விருது பெற்றார் ஜெமினிகணேசன்.

ஜெமினி கணேசன் இயக்கிய ஒரே படம் இதய மலர். கமல்ஹாசன் மற்றும் சுஜாதாவுடன் இதில் அவரும் நடித்திருந்தார். ‘ஆனந்த விகடன்’ ஆசிரியர் குழுவில் இருந்த தாமரை மணாளன் இணைந்து இயக்கியிருந்தார்.

தாய் உள்ளம் படத்திற்குப் பிறகு ஜெமினி கணேசன் வில்லனாக நடித்த (அநேகமாக) ஒரே படம் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பான “வல்லவனுக்கு வல்லவன்”. இதில் ஜெமினி கணேசன் எதிர்பாராத விதமாக இறுதியில் வில்லனாக வெளிப்படுகிறார் என்பதும், வில்லனாக அறியப்பட்டிருந்த அசோகன் இதன் கதாநாயகன் என்பதும், துவக்கத்தி்ல் வில்லன் போலக் காணப்படும் மனோகர் காவல்துறை அதிகாரியாக வெளிப்படுகிறார் என்பதும் சுவையானவை. இத்திரைப்படத்தில் ஒரே ஒரு பாடற்காட்சியில் சாவித்ரி கௌரவ நடிகையாகத் தோன்றியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜெமினி கணேசன் சொந்தக் குரலிலும் அற்புதமாகப் பாடக் கூடியவர் என்றும், அந்நாளைய இந்திப் பாடகர் சைகால் பாடல்களை ஒற்றியெடுத்தாற்போலப் பாடுவது அவர் வழக்கம் என்றும் அவரது பல பாடல்களைப் பாடிய பிரபல பின்னணிப் பாடகர் பி.பி. ஸ்ரீனிவாஸ் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். தாம் இயக்கிய “இதயமலர்” திரைப்படத்தில் “லவ் ஆல்” என்று துவங்கும் ஒரு பாடலை ஜெமினி பாடியிருந்தார். அவர் சொந்தக் குரலில் பாடிய ஒரே பாடல் இது.

  • இந்திப் படவுலகில் நுழைந்து 1970ஆம் ஆண்டுகளின் துவக்கத்தில் முன்னணி நடிகையாக முன்னேறிக் கொண்டிருந்த ரேகா  தாம் ஜெமினி கணேசன் – புஷ்பவல்லியின் மகள் என அறிவித்தார். ஜெமினி இதை ஒப்புக் கொண்டார்.

  • ரேகாவைத் தவிர ஜெமினி கணேசனின் வாரிசுகள் யாரும் திரையுலகில் புகழ் பெறவில்லை. அவரது மகள் ஜீஜி ஸ்ரீதர் இயக்கத்தில் கார்த்திக்கின் ஜோடியாக “நினைவெல்லாம் நித்யா:” என்னும் திரைப்படத்தில் நடித்தார். இதுவே அவரது முதலும் கடைசியுமான திரைப்படம். பின்னர் மருத்துவக் கல்வி பெற்று எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு உருவாக்குவதில் அவர் பெரும்பங்கு அளித்துள்ளார்.

  •  ஜெமினி கணேசன்- மனைவி அலமேலு அம்மாள் இவர்களின்
    மகளான கமலா செல்வராஜ் செயற்கைக் கருத்தரிப்பு மருத்துவச் சிகிச்சை முறைமையின் முன்னோடிகளில் ஒருவராக பெரும் ஆராய்ச்சிகளும், பங்களிப்பும் அளித்துள்ளார்……அளித்தும் வருகிறார்.

தன்னுடைய வாழ்க்கையின் பெரும்பகுதியை திரைத்துறைக்கே அர்ப்பணித்துக்கொண்ட ஜெமினிகணேசன், 2005 ம் ஆண்டு மார்ச் மாதம் 22 ம் நாள் அதிகாலை இரண்டு மணியளவில் காலமானார்.

ஜெமினிகணேசனின் உடல் ஊர்வலமாக பெசன்ட்நகர் சுடுகாட்டுக்கு எடுத்துச்செல்லப்பட்டது. அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில் 21 குண்டுகள் முழங்க போலீஸ் மரியாதையுடன் ஜெமினிகணேசனின் உடல் தகனம் செய்யப்பட்டது.ஜெமினிகணேசன் இந்த மண்ணுலகைவிட்டு மறைந்தாலும் அவர் விட்டுச்சென்ற திரைப்படங்களுக்கு அழிவே இல்லை. காலத்தால் அழியாத காவியத் திரைப்படங்களைக் கொடுத்த காதல் மன்னன் என்றென்றும் நம் நினைவில் வாழ்ந்துகொண்டே இருப்பார் என்பதுதான் நிதர்சனமான உண்மை.

அஞ்சல் தலை வெளியீடு:—
தமிழ் திரைப்படத்துறையின் காதல் மன்னன் என்று வருணிக்கப்படும் காலம் சென்ற நடிகர் ஜெமினி கணேசன் அவர்களின் தபால்தலையினை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் தயாநிதிமாறன் சென்னையில் நடைபெற்ற விழாவில் வெளியிட்டார். ஐந்து ரூபாய் நாணயப்பிரிப்புகளில் வெளியான இந்தத் தபால் தலையினை ஜெமினி கணேசன் அவர்களின் புதல்விகள் கமலா செல்வராஜ், ரேவதி சுவாமிநாதன் ஆகியோர் பெற்றுக் கொண்டார்கள்.

Tags
Show More

3 Comments

  1. Your style is very unique in comparison to other folks I’ve read stuff from.
    Many thanks for posting when you have the opportunity, Guess I’ll just bookmark this page.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close