தர்பார்= சினிமா விமர்சனம்..!!

தர்பார்= சினிமா விமர்சனம்..!!

தர்பார்=சினிமா விமர்சனம்..!!

மும்பை நகரத்தையே தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒரு போதை கும்பல் தலைவன், போலீசார்கள் 17 பேர்களை உயிரோடு எரித்து கொல்கிறான். அதனால் மும்பை போலீஸ் மீது பொதுமக்களுக்கு ஒரு அவநம்பிக்கை ஏற்படுகிறது. இந்த அவநம்பிக்கை காரணமாக போலீஸ் வேலையில் இருந்து பலர் விலகிவிடுகின்றனர். இதனால் போலீஸ் படையே குறைகிறது. போலீஸ் படை குறைந்ததால் அங்கு போதை மருந்து மற்றும் பெண்கள் மற்றும் சிறுமிகள் கடத்தப்படுவதும் அவர்கள் விபச்சாரத்திற்கு தள்ளப்படுவதும் அதிகரிக்கின்றது.இந்த சூழலில், டெல்லியில் என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்டாக இருக்கும் ரஜினி மூன்று கண்டிஷன்களுடன் மும்பை போலீஸ் கமிஷனராக பதவியேற்கிறார். பதவியேற்றதும், போதை மருந்து கும்பலால் கடத்தப்பட்ட ஒரு அரசியல்வாதியின் மகளை காப்பாற்றுகிறார்.இதேபோல் போதை மருந்து கடத்தல் கும்பலிடம் சிக்கியிருக்கும் ஏராளமான இளம் பெண்களையும் காப்பாற்றி, மும்பை நகரத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார் ரஜினி.

இந்த போதை மருந்து கடத்தல் கும்பலின் பின்னணியில் இருப்பவர்களை பிடிக்க தீவிரம் காட்டும் ரஜினி, ஒரு தொழிலதிபரின் மகனுக்கு இதில் தொடர்பு இருப்பதை கண்டுபிடித்து அவனை கைது செய்துவிடுகிறார். அந்த தொழிலதிபர், தனக்கு இருக்கும் அதிகார பலத்தை பயன்படுத்தி தனது மகனை வெளியே கொண்டுவர முயற்சிகளை மேற்கொள்கிறார்.இதற்கெல்லாம் அசராத ரஜினி தன் சாதுர்யத்தால் அந்த தொழிலதிபரின் மகனை கொல்கிறார்.

இறந்தது தொழிலதிபரின் மகன் மட்டுமல்ல, உலகளவில் போதை மருந்து கடத்தல் செய்து வரும் தாதா சுனில் ஷெட்டியின் மகன் என பின்னர் தெரிய வருகிறது. இதையடுத்து ரஜினி சுனில் ஷெட்டியின் மகனை எதற்காக கொன்றார்? தனது மகனை கொன்ற ரஜினியை வில்லன் சுனில் ஷெட்டி என்ன செய்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை…!!

‘மூன்று முகம்’ படத்திற்கு பின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு கச்சிதமாக பொருந்திய போலீஸ் கேரக்டர். திமிர், வில்லத்தனம் மற்றும் காமெடியுடன் கலந்த வசனங்கள், தோற்றத்தில் இளமை, கண்களில் அதே பவர், ஆக்ஷ்ன்  காட்சிகளில் ‘பாட்ஷா’வை நினைவுப்படுத்துவது என ஒரு ரஜினி படம் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்ற எடுத்துக்காட்டாய் இந்த படம் அமைந்துள்ளது.

ரஜினி ரசிகர்களை முழுமையாக எப்படி திருப்திப்படுத்த வேண்டும் என்று பார்த்து பார்த்து இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ஒவ்வொரு காட்சியையும் வைத்துள்ளார். நயன்தாராவுடன்  ரொமான்ஸ் மற்றும் காமெடியில் இருபது வருடங்களுக்கு முந்தைய ரஜினியை அப்படியே பார்க்க முடிகிறது. அதே நேரத்தில் மகளிடம் காட்டும் அன்பு, பாசம், இரண்டாம் பாதியில் மகளுக்காக அவர் எடுக்கும் அவதாரம் ஆகியவையும் ரஜினி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.நிவேதா தாமஸ்க்கு ரஜினியின் மகள் கேரக்டர் . பல காட்சிகளில் குறிப்பாக ரயில்வே ஸ்டேஷன் காட்சி, மருத்துவமனை காட்சியில் நிவேதா
தாமஸின் நடிப்பு அற்புதம்.நாயகி நயன்தாரா கொடுத்த வேலையை கச்சிதமாக செய்து இருக்கிறார்.
ரஜினியோடு இணைந்து யோகிபாபு
நகைச்சுவைக் காட்சிகளில் ப்ரமாதப் படுத்திவிட்டார்.
சுனில்ஷெட்டியின் வில்லத்தன நடிப்பு நறுக்கென்று இருந்தது.
ரஜினியுடன் வரும் போலீஸ் அதிகாரிகள் அனைவரும் மிடுக்குடன் நடித்து மனதில் நின்று விட்டார்கள். நயன்தாராவின் தந்தையாக வரும் ரெங்கநாதன்,பெரியப்பா மகனாக வரும் ஸ்ரீமன் போன்றவர்கள் ரஜினியோடு நடித்திருக்கிறார்கள் என்ற பெருமைதான் அவர்களுக்கு.மற்ற படி படம் முழுவதும் ரஜினியின் தர்பார்தான். ’வயது என்பது எனக்கு ஒரு நம்பர் தான்’, ’முடியாததை முடித்துக் காட்டுவதுதான் என்னுடைய ஸ்பெஷல்’ உள்பட ஒருசில பஞ்ச் டயலாக்குகள் ரஜினிக்காகவே ஏஆர் முருகதாஸ் எழுதியது ரசிக்கும் வகையில் உள்ளது. அதேபோல் ’பணம் இருந்தால் சிறைச்சாலையில் உள்ளவர்கள் ஷாப்பிங் கூட போகலாம்’ என அரசியல் நையாண்டி வசனங்களும் உண்டு.படத்திற்கு மிகப்பெரிய பலம் அனிருத்தின் பின்னணி இசை, அனிருத்தின் இசையில் சும்மா கிழி, டம் டம், தனி வழி ஆகிய பாடல்கள் அருமை. ஒவ்வொரு பிஜிஎம்மையும் தெறிக்கவிட்டுள்ளார். குறிப்பாக ரஜினியின் என்ட்ரி செம மாஸ்.. ரஜினியை பயங்கர ஸ்டைலிஷாக காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன்.

மொத்தத்தில் “தர்பார்” ரஜினி ரசிகர்களுக்கு இனிப்பான பொங்கல் விருந்து.

.

 

 

 

 

 

 

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS