இயல்-இசை-நாடகம்இயல்-இசை-நாடகம்-சாதனையாளர்கள்செய்திகள்தமிழ் செய்திகள்

இளையராஜா 75 இசை நிகழ்ச்சி==2==(3-2-2019)

இளையராஜா 75 இசை நிகழ்ச்சி==2==(3-2-2019).

 

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் இசையமைப்பாளர் இளையராஜாவை கவுரவப்படுத்த ‘இளையராஜா 75’ என்ற பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 2 -2 -2019 மற்றும் 3 -2 -2019 ஆகிய இரு நாட்கள் வெகு சிறப்பாக நடைபெற்றது.
தென்னிந்திய திரையுலகினர் மட்டுமின்றி, இந்தியா முழுவதிலும் இருந்து சினிமா பிரபலங்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

விழாவின் முதல் நாள் (2 -2 -2019 ) நிகழ்ச்சியில்
மரியாதைக்குரிய தமிழக ஆளுநர் திரு. பன்வாரிலால் புரோஹித் குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார்.

இரண்டாவது நாள்(3-2-2019 )நிகழ்ச்சியில்….கமல்…ரஜினி…மணிரத்னம்…என்று பலர் கலந்து கொண்டார்கள்.
“மணி ரத்னம் படம் மூலம் தான் பாடலாசிரியராக மாறியதை, மணி ரத்னம் மேடைக்கு வந்தபோது இளையராஜா பகிர்ந்துகொண்டார்.

ரஜினியை ராஜா மேடைக்கு அழைத்த போது தனது வழக்கமான ஆன்மிக பாணியில் ராஜாவுடனான தனது அனுபவங்களை ரஜினி கூறினார். “இளையராஜா சுயம்பு – இது அபூர்வமானது அதனாலேயே அதற்குச் சக்தி அதிகம், அதனால் தான் 42 ஆண்டுகள் கடந்தும் இளையராஜா இசை உலகில் ஆட்சி செய்கிறார். . சரஸ்வதி அவருடன் இருப்பதால் லட்சுமியும் அவருடன் இருக்கிறார். இசை அமைப்பாளர்களுக்கு ஆண்டவன் ஆசீர்வாதமும் நம்மை இயக்கும் சக்தியும் உண்டு. அன்னக்கிளியில் தொடங்கிய அந்த அபூர்வ சக்தியை இப்போதுவரை பார்க்கிறேன்’ தயாரிப்பாளர்கள் சங்கம் இளையராஜாவுக்கு 75-வது பிறந்தநாள் விழாவையும், பாராட்டு விழாவையும் நடத்தி உள்ளது.இதில் நானும் பங்கேற்பதில் மகிழ்ச்சி. இளையராஜாவை ‘சார்’ என்று தான் நான் அழைத்து வந்தேன். ஒருகட்டத்தில் ஆன்மிகவாதியாக பார்த்தேன். ரமண மகரிஷியை எனக்கு அறிமுகம் செய்துவைத்தது இளையராஜாதான். எப்போதும் மாலை அணிந்துகொண்டு இருக்கும் இளையராஜாவை பார்த்து நான், பின்னர் ‘சாமி’ என்று அழைக்க ஆரம்பித்தேன்.என்றார்.பாடல்களை மட்டும் வைத்து பிரபலமானவர் என்று இளையராஜாவை மதிப்பிட முடியாது. அதற்கும் மேலாக அவர் வாழ்க்கை தியாகம் நிறைந்தது. கஷ்டப்பட்ட எத்தனையோ தயாரிப்பாளர்களுக்கு உதவி செய்து இருக்கிறார். 1980 கால கட்டங்களில் பொங்கல், தீபாவளி பண்டிகைகளுக்கு 13, 14 படங்கள் என்று வெளியாகும். அவற்றில் 10, 12 படங்கள் இளையராஜா இசையமைத்தவைகளாகவே இருக்கும்.

நிறைய தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களுக்கு ரீ-ரிக்கார்டிங் செய்ய இளையராஜா ஸ்டூடியோவில் வரிசையில் நிற்பார்கள். அவர் பாடல்களுக்கு இசையமைத்து ரீ-ரிக்கார்டிங் செய்துவிட்டால், அந்த படத்தின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுவிடும்.

ஒரே நாளில் 3 படங்களுக்கு கூட தூங்காமல் ரீ-ரிக்கார்டிங் செய்திருக்கிறார். ஆனால் இப்போது ஒரு படத்துக்கு ரீ-ரிக்கார்டிங் செய்ய 30 நாட்கள் ஆகிறது. தயாரிப்பாளர்கள் கஷ்டப்படக்கூடாது என்ற ஒரே காரணத்துக்காக அவர் இப்படி உழைத்தார்.

டைரக்டர்கள் கதை சொல்லும்போது சரியாக இல்லாமல் இருந்தால் அதில் சில திருத்தங்கள் சொல்வார். அதுமட்டுமின்றி தயாரிப்பாளர்களிடம் பணம் வாங்காமல் கூட இருந்திருக்கிறார். இதனால் தான் அவரின் காலில் விழுகிறார்கள். பாடல்களுக்கு 70 சதவீதம் இளையராஜாவே பல்லவி போட்டிருக்கிறார்.மற்ற பாடல் வரிகளிலும் அவருடைய பங்களிப்பு இருக்கிறது. சினிமா துறைக்கு பெரிய தியாகம் செய்திருக்கிறார். அவர் நீண்ட காலம் நிம்மதியாக வாழவேண்டும்.

நிகழ்ச்சி தொகுப்பாளர் சுஹாசினி ரஜினியிடம் ’உங்களுக்குப் பிடித்த ராஜா சார் பாட்டு எது’ என்று கேட்டார்.
அதற்கு ரஜினி, ’அவர் இசையமைத்த எல்லா பாடல்களும் எனக்கு பிடிக்கும். ஒரு ஹீரோவுக்கு முரட்டுகாளையில் வரும் ‘பொதுவாக என் மனசு தங்கம்’ பாட்டை விட வேறு என்ன வேண்டும்?..
‘ராமன் ஆண்டாலும்’ பாட்டு இப்பவும் நினைவு இருக்கு. ’ஊரை தெரிஞ்சிக்கிட்டேன்’ மாதிரி ஒரு பாட்டு வருமா?. அவர் என்னையே பாட வைத்தார். நான் 5 வரிகள் தான் பாடினேன். அதற்கே 5 மணி நேரம் ஆனது. இருந்தாலும் அவர் கமலுக்குதான் நிறைய நல்ல பாட்டு போட்டிருக்கார்’’என்று ஆதங்கப்பட்டார்.

இதற்கு பதில் அளித்த இளையராஜா, ‘இவருக்கு நல்ல பாட்டு போடறதா கமல் சொல்வார். நான் ஆள் பார்த்து இசை அமைத்ததில்லை. எனக்கு எல்லாரும் ஒண்ணுதான், ராமராஜன் படங்களுக்கு போடலையா, மைக் மோகன்னே மோகனுக்கு பேர் வெச்சாங்க’ என்றார். உடனே ரஜினி ‘சாமி நான் கமலுக்கும் எனக்கும் நடுவில் சொன்னேன்’ என்றார். இளையராஜா ‘இல்ல சாமி, நான் பாட்டுல வித்தியாசமே பாக்கறதில்ல’ என்று சொல்ல கைதட்டல் எழுந்தது.சுஹாசினி ‘ரஜினி சார் ஒரு சூப்பர் ஸ்டார், இளையராஜா ஒரு சூப்பர் ஸ்டார், 2 சூப்பர் ஸ்டார்களையும் ஒரே மேடையில்…’ என்று சொல்ல தொடங்க அவரை இடைமறித்த இளையராஜா ’ரெண்டு பேர் இல்ல. ஒரே சூப்பர் ஸ்டார் தான். மேடையில் ஏறினா ஏதாவது பேசிடறதா… சூப்பர் ஸ்டார்னா அவர் மட்டும்தான்’ என்று ரஜினியை கைகாட்டினார். ரசிகர்கள் விசில் அடித்து கைதட்டினார்கள்.
அதுவரை இயல்பான இசைக் கச்சேரி நிகழ்வாகக் கடந்துகொண்டிருந்த நிகழ்ச்சி கமல் வருகைக்குப் பின் சூடு பிடித்தது .நிகழ்ச்சியைக் கலகலப்பாக, அறிவுப்பூர்வமானதாக, அர்த்தமுள்ளதாக மாற்றி தனக்கும் இளையராஜாவுடனான நட்பை, தொழில் உறவைக் காதலுடன் கட்டிப்பிடித்து ராஜாவுக்கு முத்தம் கொடுத்து நிகழ்ச்சியைப் பெரும் வெற்றியாக மாற்றினார் கமல்ஹாசன்.

தமிழ் சினிமாவின் இரு துருவங்களில் ஒருவர், பரபரப்பான அரசியல்வாதி என்பதைக் கடந்து ஒரு கலைஞனாக, ராஜாவின் பரம ரசிகனாகவே மாறினார் கமல்ஹாசன். இசைக்கச்சேரியில் பாடப்பட்ட பாடல்களில் எட்டுக்கும் மேற்பட்ட பாடல்களை தன் மகள் ஸ்ருதி ஹாசனுடனும், மற்றும் பிற பாடகர்களுடனும் இணைந்து பாடியது பார்வையாளர்களை பரவசப்படுத்தியது.

வந்தோமா வாழ்த்தினோமா என்று பிற நடிகர்களைப் போல அல்லாமல் விழாவைத் தன் வசப்படுத்தி தயாரிப்பாளராக சங்கத்துக்குப் பெருமை சேர்த்தார். திரைத்துறை ஆளுமையாக எந்த நிலையிலும் தன்னால் பிரகாசிக்க முடியும் என்பதைத் தான் பாடிய பாடல்கள் மூலம் நிரூபித்தார். இப்படி ஒரு நிகழ்வு விழாவில் அரங்கேறும் என்பதை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

மத்திய அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணன் அரங்கில் அமர்ந்திருந்தபோதே தன்னை அரசியலுக்கு வா என்று அழைத்த சகோதரன் இளையராஜா என்பதைப் பகிரங்கமாக சொன்னார் கமல். என்னை நன்றாகப் பாட வைத்த வாத்தியார் இளையராஜா என்று புகழாரம் சூட்டினார் கமல்.
ஒரு கட்டத்தில் கமலும் – ராஜாவும் இணைந்து பாடிய போது நெகிழ்ந்து ராஜாவைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த போது அரங்கம் கைதட்டலால் அதிர்ந்தது. கதாநாயகிக்குக் கொடுக்க வேண்டியதை எனக்குக் கொடுத்து விட்டார் என ராஜா கூறிய போது , நான் ராஜாவின் இசையைக் காதலிப்பவன் இந்த மேடையில் முத்தம் கொடுப்பது பொருத்தமானது. இது எங்களது மேடை என்றார் கமல். ஒரு திரை ஆளுமையை அதற்கு இணையான திரை ஆளுமை பாராட்டுவது அபூர்வமானது.

இளையராஜா இசை நிகழ்ச்சி சரியாக 6.45 மணிக்கு தொடங்கி 12.30-க்கு முடிந்தது. 35 பாடல்கள் பாடப்பட்டன. முதல் பாடலாக குரு பிரம்மா பாடல் கோரசில் பாடப்பட்டது. அடுத்து இளையராஜா ஜனனி ஜனனி பாடலுடன் பாட தொடங்கினார். சுமார் 6 மணி நேரம் தொடர்ந்து கச்சேரி செய்தாலும் இளையராஜா முகத்தில் சின்ன சோர்வுகூட தென்படவில்லை.

கடைசியாக முடிக்கும் போது ‘நாயகன்’ படத்தில் இடம் பெற்ற தென்பாண்டி சீமையிலே பாடலுடன் கச்சேரி முடிந்தது. ‘என்றென்றும் நினைவில் நிற்கும் இந்நொடிதானே…’ என்ற வரிகளுடன் நிகழ்ச்சியை முடித்தார். 85 சதவீத இருக்கைகள் நிரம்பி வழிந்தன.

பாடலை பாடி முடித்து இளையராஜா ரசிகர்களின் மத்தியில் பேசும்போது, ‘‘இவ்வளவு பெரிய விழாவாக இது நடைபெறும் என நான் எண்ணவில்லை. விழாவை நடத்திய தயாரிப்பாளர் சங்கத்துக்கும், அதன் தலைவர் விஷாலுக்கும் எனது பாராட்டுகள். இந்த நிகழ்ச்சி நடக்கக் கூடாது என்று நினைத்தவர்களுக்கும் ரொம்ப நன்றி.இந்திய நீதிமன்ற சரித்திரத்தில் ஒரு தனி மனிதனுக்கு கோர்ட்டு சான்றிதழ் கொடுத்தது என்றால் அதுக்கு காரணம் இந்த நிகழ்ச்சியை எதிர்த்து வழக்கு போட்டவர்கள் தான். விஷால் மற்றும் அவரின் அணி வென்று சங்கத்தின் வேலைகளைச் செய்தால், இவர்கள் வெளியிலிருந்து இந்த மாதிரி சங்கத்துக்கு பாராட்டுகளை வாங்கித் தருகிறார்கள்.

சிலர் பாட்டுக்கு மியூசிக் போட்டு பெரிய ஆள் ஆவார்கள், சிலர் பாடலில் இருக்கும் குறையை கண்டுபிடித்து காட்டி பெரிய ஆள் ஆவார்கள். அந்தமாதிரிதான் அவங்க இந்தமாதிரி நிறைய கேஸ் போட்டு கோர்ட்டுக்கும் வீட்டுக்கும் நடையோ நடைன்னு நடக்கணும் என்று வாழ்த்துறேன்” என்றார். அப்போது குழுமியிருந்த ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

Tags
Show More

Related Articles

Close