விமர்சனம்

சர்வம் தாள மயம்-சினிமா விமர்சனம்..!!

சர்வம் தாள மயம்-சினிமா விமர்சனம்..!!

மின்சாரக்கனவு,கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படங்களை இயக்கிய ராஜீவ்மேனன் 18 -வருடங்களுக்குப் பிறகு
கதை-வசனம்-எழுதி இயக்கி வெளி வந்திருக்கும் படம் “சர்வம் தாள மயம்”. முழுக்க முழுக்க இசை சம்பந்தப் பட்ட படம்.முழுக்க முழுக்க நம் பாரம்பரிய இசை பற்றிய ஒரு படம். அதற்குள் குரு சிஷ்யன் உறவு, சாதி ஏற்றத்தாழ்வுகள், தந்தை மகன் பாசம், டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிகளின் டிஆர்பி விளையாட்டு என பல வி‌ஷயங்களை சுவாரசியமாகவும் உணர்வுபூர்வமாகவும் அழகாக கோர்த்து திரைப்படமாக்கி இருக்கிறார் ராஜீவ் மேனன்.இசை உலகத்துக்கே சக்ரவர்த்தியாக விளங்குகிறார் மிருதங்க வித்வான் நெடுமுடி வேணு. அவருக்கு மிருதங்கம் செய்து கொடுக்கும் குமரவேல்
கிறித்துவ குடும்பத்தை சேர்ந்தவர்.அவருடைய மகன் ஜி.வி.பிரகாஷ். இவர் நெடுமுடி வேணுவிடம் மிருதங்கம் கற்க ஆசைப்படுகிறார்.அவர்
மனதை கவர்ந்து அவரிடம் சிஷ்யனாகிவிட வேண்டும் என்ற துடிப்பை பார்வை, நடை, பாவனை என அனைத்திலும் காட்டி, அடித்தட்டு இளைஞனின் ஏக்கத்தை உணர்த்திவிடுகிறார் ஜி.வி.பிரகாஷ் ஒரு கட்டத்தில் நெடுமுடி வேணுவும் அவரை சிஷ்யனாக ஏற்றுக்கொள்கிறார். ஜி.வி.பிரகாஷ் தீவிர விஜய் ரசிகராக
லந்து கொடுப்பது, அப்பா கஷ்டப்படுவதை பார்த்து உருகுவது, போதையில் சவால் விடுவது, இரட்டை குவளை முறையை பார்த்து ஆவேசப்படுவது என அவர் நடிப்பில் இந்த படம் ஒரு மைல்கல். “நீ கச்சேரி வாசிக்கணும்” என்று குரு சொல்லும்போது ஏற்படும் பரவசத்தை அப்படியே நமக்கு கடத்துகிறார் ஜி.வி.பிரகாஷ். மிருதங்க வித்வான் வேம்பு ஐயராகவே வாழ்ந்து இருக்கிறார் நெடுமுடி வேணு. மேதை என்ற கர்வத்தையும், தகுதியானவனுக்கு தகுதியானது சென்று சேர்ந்துவிட வேண்டும் என்ற தர்மத்தையும் படம் முழுக்க தாங்குகிறார். கொஞ்சம் கொஞ்சமாக தன்னிலை உணர்ந்து அவர் திரும்பும் காட்சிகளில் அனுபவ நடிப்பு வெளிப்படுகிறது. அவருக்கு விருதுகள் குவியும். நெடுமுடி வேணுவின் மனைவியாக சாந்த தனஞ்ஜயன்(பிரபல பரத நாட்டியக் கலைஞர்) அழகாய் நடித்து அசத்திவிட்டார்.எதிர்மறை கதாபாத்திரம் என்றாலும் அதிலும் நியாயம் செய்து இருக்கிறார் வினீத். அண்ணா, அண்ணா என்று சுற்றும் அவரே வேம்பு ஐயருக்கு எதிராக மாறுவது ,டிவி ரியாலிட்டி ஷோவில் காட்டும் மிடுக்கு என்று கலக்கியிருக்கிறார்.
ஜிவி.பிரகாஷின் பெற்றோராக குமரவேல், தெரசா நடுத்தர குடும்பத்தை பிரதிபலிக்கிறார்கள். இயலாமையையும் தொழில்பக்தியையும் இயல்பாக கடத்துகிறார் குமரவேல். அவருக்கும் இது முக்கியமான படம்.

கர்நாடக சங்கீத வித்வான்கள்
பாம்பே ஜெயஸ்ரீ, சிக்கில் குருசரண்,
,மிருதங்க வித்வான் சுமேஷ் நாராயணன்,போன்றவர்களை நடிக்கவைத்து அசத்திய ராஜீவ் மேனனுக்கு ஸ்பெஷல் ஷொட்டு.
“8 -தோட்டாக்கள்” படத்தின் மூலம் அறிமுகமான அபர்ணா பாலமுரளி இதில் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.A.R .ரஹ்மான் தன் கை வண்ணத்தில் பாடல்களுக்கும்-பின்னணி இசையிலும் எல்லோரையும் மயக்கியேவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும்.குறிப்பாக..சர்வம் தாளமயம்….என்ற பாட்டும்…,எப்போ வருமோ..எங்க காலம்..எப்பபோ கொறையும் எங்க பாரம்…என்ற பாட்டும்…,மனதில் அப்படியே பதிந்து விட்டது.தொகுப்பாளினி திவ்யதர்ஷினியை வைத்தே ரியாலிட்டி நிகழ்ச்சிகளை கிண்டல் செய்து இருப்பது இயக்குனரின் செமகெத்து.
. ரவி யாதவ்வின் ஒளிப்பதிவும், ஆண்டனியின் படத்தொகுப்பும் கச்சிதம்.மொத்தத்தில்இசைக்கு சாதி, மதம், பொருளாதாரம் எதுவும் தெரியாது. அன்பும் அர்ப்பணிப்பும் மட்டுமே இசைக்கான ஆதாரங்கள் என்பதை உணர்த்திய விதத்தில்`சர்வம் தாள மயம்’ இசையின் சங்கமம்….பார்த்து பரவசப்படலாம்.

Tags
Show More

Related Articles

Close